நான் பந்தய குதிரை.. எனக்கு எதுவும் தடையில்லை – தேர்தல் களத்தில் மல்லுக்கட்டும் 91 வயது வேட்பாளர்! !
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாக்குப் பதிவு மே 10 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை துவங்கியுள்ளனர். அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக பல்வேறு தொகுதிகளில் விழா கோலம் பூண்டுள்ளது. தேர்தலை ஒட்டி இருகட்சி மட்டுமின்றி சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஷாமனூர் சிவசங்கரப்பா தேர்தலில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 91 வயதான சிவசங்கரப்பா தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூறும் போது, “எனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், கடவுள் அருளும் உள்ளது.
வேறென்ன வேண்டும்? இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்து இருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் தேவாங்கரெ தெற்கு தொகுதியில் போட்டியிடும் சிவசங்கரப்பா, இந்த தேர்தலில் போட்டியிடும் மூத்த வேட்பாளர் ஆவார். தேவாங்கரெ வடக்கு தொகுதியில் சிவசங்கரப்பாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எஸ்எஸ் மல்லிகார்ஜூன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.