கட்சி அந்தஸ்து குறித்து அமித்ஷாவுடன் போனில் பேசியதை நிரூபித்தால் பதவி விலகுவேன் – மம்தா ஆவேசம்!!
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் திரும்ப பெற்றது. இதற்கிடையே, கட்சி அந்தஸ்து விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் மம்தா பானர்ஜி போனில் பேசியதாக பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டி இருந்தார். மேலும், பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா, மேற்கு வங்காள மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சூரியில் பா.ஜ.க. அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், நாட்டில் மீண்டும் மோடி பிரதமர் ஆவதை உறுதி செய்யும் வகையில் மேற்கு வங்காள மாநில மக்கள் எங்களுக்கு 35-க்கும் அதிகமான இடங்களைத் தரவேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில், மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: எங்களது கட்சி தொடர்ந்து, அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்றே அழைக்கப்படும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய அந்தஸ்து தொடர்பாக அமித்ஷாவுடன் போனில் பேசியதை நிரூபித்தால் நான் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது என தெரிவித்தார்.