கர்நாடகா சட்டசபை தேர்தல்- பயிற்சியில் கலந்து கொள்ளாத 117 பேருக்கு கலெக்டர் நோட்டீஸ்!!
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை தடுப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் மாநிலம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு நாள் பயிற்சி சிவமொக்கா பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான செல்வமணி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும். வாக்கு மையத்தில் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தால் உடனே அதனை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தநிலையில் ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களின் விவரங்களை சேகரிக்கும் படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் விவரங்களை சேகரித்தனர். அதில் மாவட்டத்தில் இருந்து 117 பேர் கலந்து கொள்ளவில்லை. பயிற்சியில் கலந்து கொள்ளாத காரணம் என்ன குறித்து 117 பேருக்கும் கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.