என்னாங்க இது அநியாயம்.. நம்ம ஊரு கோழிக் கறி விலைக்கு ஒரு முட்டை விலை! விழிபிதுங்கும் ஜப்பானியர்கள்!!!
ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக முட்டையின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜப்பான் நாட்டில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. அன்று முதல் கடந்த மாத காலம் வரை இதுவரை 17 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் இறந்துள்ளன.
மேலும் நோய் பாதிப்புடைய பறவைகள் இறந்தால் கூட புதைப்பதற்கு இடம் இல்லை என்ற நிலை உள்ளது. மற்ற பறவைகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்நாட்டு சுகாதாரத் துறை அது போன்ற ஒரு முயற்சியை செய்து வருகிறது.
நோய் பாதித்த கோழிகளை ஆழமான இடத்தில் புதைக்க வேண்டும். ஆனால் இனியும் கோழிகளை புதைக்க இடம் இல்லை என்கிறார்கள். இதுவரை ஏற்படாத அளவிற்கு இங்கு பறவைக் காய்ச்சல் தீவிரமாக உள்ளதாக கூறுகிறார்கள். இந்த பறவைக் காய்ச்சல் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியாவில் பரவியுள்ளது. இந்த பறவைக் காய்ச்சல் எதிரொலியால் முட்டையின் விலை உயர்ந்துள்ளது.
மெக்டொனால்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் முட்டையை கொண்டு செய்யப்படும் டிஷ்கள் செய்யப்படுவதில்லை. இறந்த கோழிகளில் 90 சதவீதம் முட்டையிடும் கோழிகள். கடந்த மாதம் தொடக்கத்தை வைத்து பார்த்தால் ஒரு முட்டையின் விலை 335 யென்னுக்கு விற்பனையானது. அதாவது ஒரு யென்னிற்கு இந்திய மதிப்பு 0.61 காசுகளாகும். அதன்படி 335 யென் என்றால் ஒரு முட்டை 204 ரூபாய்க்கு விற்பனையானது. இப்படியே தினந்தோறும் விலையேற்றத்தை சந்திக்கும் இந்த ஜப்பானில் தற்போதைய நிலவரப்படி ஒரு முட்டையின் விலை ரூ 213 ஆகும். இதனால் மக்கள் ஆம்லெட், ஆஃப்பாயில் உள்ளிட்ட முட்டையை கொண்டு செய்யப்படும் டிஷ்களை தவிர்த்து வருகிறார்கள். அப்படியே முட்டையை வாங்கி ஆம்லெட் போட்டால் சமூகம் பெரிய இடம் என்று அர்த்தம். அதாங்க பணக்காரர் என்று அர்த்தம்! இது போன்ற ஒரு விலை உயர்வு என்பது 1993 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் உள்ளது. இதனால் ஹோட்டல்களிலும் முட்டை ரெசிபிகள் தயார் செய்யப்படுவதில்லை. அப்படியே அதிக விலை கொடுத்து வாங்கினாலும் அதை யாரும் விரும்பி சாப்பிடவில்லை.
விலை உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும் அந்த முட்டையில் ஏதேனும் பறவைக் காய்ச்சல் கிருமி இருக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கனும் கிடைக்காமல் நிறைய பேர் மீன் உணவிற்கு மாறிவிட்டனர். ஒரு முட்டையை 213 ரூபாய்க்கு வாங்குவதற்கு பதிலாக மீன் வகைகளை வாங்கி மனதாரவும் வயிறாரவும் சாப்பிடும் மனநிலைக்கு ஜப்பானியர்கள் வந்துவிட்டனர். தற்போது இருக்கும் நிலையில் அந்த முட்டைகளை வைத்து குஞ்சு பொரித்தால் அந்த கோழி குஞ்சுக்கு ப்ளூ வராமல் தடுக்க முடியுமா என்ற யோசனையிலும் சுகாதாரத் துறை இறங்கியுள்ளது.
நம்ம ஊர்ல சீசனின் போது வெங்காயம், தக்காளி விலை உயரும். அது போல் இங்கு முட்டை விலை உயர்ந்துள்ளது. இதனால் மீனை வைத்து ஆம்லெட் போடும் நிலைக்கு ஜப்பான் உணவகங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஜப்பானில் இருக்கும் குறைந்தது 6 மாதங்கள் வரையிலாவது முட்டை சார்ந்த உணவுகளை தவிர்க்க மக்களும் ஹோட்டல் நிர்வாகத்தினரும் முடிவு செய்துள்ளனர்.