;
Athirady Tamil News

குஜராத் இனக்கலவர வழக்கு- முன்னாள் பெண் மந்திரி உள்பட 67 பேர் விடுதலை!!

0

குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ந்தேதியன்று நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச்சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கரசேவகர்கள் 58 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு மறுநாளில், இந்த கொடிய சம்பவத்தைக் கண்டித்து அங்கு முழு அடைப்பு நடந்தது. அப்போது அகமதாபாத்தில் இனக்கலவரங்கள் மூண்டன. அங்கு, நரோடா காம் பகுதியில் வெடித்த கலவரத்தின்போது, வீடுகளுக்கு தீ வைத்ததில் முஸ்லிம் சமூகத்தினர் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர்களில் 18 பேர் வழக்கு விசாரணையின்போது மரணம் அடைந்தனர். ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். முன்னாள் பா.ஜ.க. பெண் மந்திரி மாயா கொத்னானி, விசுவ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஜெய்தீப் படேல், பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் பாபு பைராங்கி உள்பட எஞ்சிய 67 பேர் மீதான வழக்கு அகமதாபாத்தில் உள்ள தனிக்கோர்ட்டில் (சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குகள்) நடந்து வந்தது. இந்த வழக்கை முதலில் நீதிபதி எஸ்.எச்.வோரா விசாரித்தார். அவர் ஐகோர்ட்டு நீதிபதி ஆனதைத் தொடர்ந்து, ஜோத்ஸ்னா யாக்னிக், கே.கே.பட், பி.பி. தேசாய் ஆகிய 3 நீதிபதிகள் அடுத்தடுத்து விசாரித்த நிலையில் ஓய்வு பெற்றனர்.

அதைத் தொடர்ந்து நீதிபதி எம்.கே. தவே விசாரித்தார். அவர் இட மாற்றம் செய்யப்பட்டார். கடைசியாக நீதிபதி எஸ்.கே. பாக்சி விசாரித்தார். எனவே இந்த வழக்கை மொத்தம் 6 நீதிபதிகள் விசாரித்துள்ளனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் 187 சாட்சிகள், கோர்ட்டுக்கு வரவழைத்து விசாரிக்கப்பட்டனர். இதேபோன்று, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் அப்போதைய பா.ஜ.க. மூத்த தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா உள்பட 57 சாட்சிகள் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்த நிலையில், 20-ந் தேதி (நேற்று) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கில் நேற்று நீதிபதி எஸ்.கே.பாக்சி தீர்ப்பு வழங்கினார். அவர், முன்னாள் பா.ஜ.க. பெண் மந்திரி மாயா கொத்னானி, விசுவ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஜெய்தீப் படேல், பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் பாபு பைராங்கி உள்பட எஞ்சிய 67 பேர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானித்து, விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை 2010-ம் ஆண்டு தொடங்கி, 13 ஆண்டுகள் நடந்ததும், சம்பவம் நடந்து 21 ஆண்டுகளுக்குப்பிறகு தீர்ப்பு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.