IMF கடமைப்பாடுகளில் ஒன்றை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டது !!
மார்ச் மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கடமைப்பாடுகளில் இலங்கை 25 சதவீதத்தைப் பூர்த்தி செய்துள்ளதுடன் ஒன்றை நிறைவேற்றத் தவறிவிட்டது: வெரிட்டே ரிசேர்ச்
உப தலைப்பு: 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான வேலைத்திட்டத்தில் அரசாங்கத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும் வகையில் ‘The IMF Tracker’ கண்காணிப்பான் நிறுவப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கண்காணிக்கக்கூடிய திட்டக் கடமைப்பாடுகளில் 25 சதவீதத்தை இலங்கை 2023 மார்ச் மாத இறுதியில் எட்டியுள்ளது. எனினும் முக்கியமான ஒரு பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது. இது வெரிட்டே ரிசேர்ச் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘The IMF Tracker’ எனும் ஆன்லைன் கண்காணிப்பான் மூலம் தெரியவந்துள்ளது. இவற்றுள் பல கடமைப்பாடுகள் “முந்தைய நடவடிக்கைகளாக” வகைப்படுத்தப்பட்டதுடன் அவை சர்வதேச நாணய நிதிய சபையின் இறுதி ஒப்புதல் கிடைப்பதற்கு முன்னதாக இலங்கையால் நிறைவேற்றப்பட்டது.
இதன் இறுதி கடமைப்பாடு, ஆன்லைன் வெளிப்படைத்தன்மை தளத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். இது தொடர்பான பின்வரும் தகவல்களை அரையாண்டு அடிப்படையில் குறித்த தளம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது: (i) அனைத்து குறிப்பிடத்தக்க பொது கொள்முதல் ஒப்பந்தங்கள் (ii) முதலீட்டுச் சபையின் கீழ் வரி விலக்குகளைப் பெறும் அனைத்து நிறுவனங்களின் பட்டியல் (iii) ஆடம்பர வாகன இறக்குமதிகளுக்கு வரி விலக்குகளைப் பெறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல். அத்தளம் 2023 மார்ச் முதலாம் திகதிக்குள் முழுமைப்படுத்தப்பட வேண்டியிருந்த நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் கூட அது பூரணப்படுத்தப்படவில்லை.
போதுமான தகவல் இல்லாமையும் இதில் கவலைக்குரிய ஒரு விடயமாகும். மார்ச் மாத இறுதியில், கண்காணிக்கப்படக்கூடிய திட்டக் கடமைப்பாடுகளில் 9 சதவீதமானவற்றின் முன்னேற்றம் எமது கண்காணிப்பானில் “unknown (தெரியாதவை)” என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, அவற்றின் முன்னேற்றம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு எந்தத் தகவல்களும் பொதுவெளியில் கிடைக்கவில்லை.
IMF திட்டத்தில் மேற்கொள்ளப்படும் உரிய நேர முன்னேற்றங்கள் இரண்டு நன்மைகளைக் கொண்டுள்ளது என்று வெரிட்டே ரிசேர்ச் குறிப்பிடுகிறது. முதலாவதாக, பல (அனைத்தும் அல்ல) செயல்களால் விளையக்கூடிய பொருள் ரீதியான நன்மைகள் ஆகும். இரண்டாவதாக, இது இலங்கையின் ஆட்சியின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தி, கடந்த கால கடன் சுமையை மறுசீரமைப்பதற்கும் எதிர்கால பொருளாதார மீட்சிக்கான பாதையை விரைவுபடுத்துவதற்குமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும்.
2023 மார்ச் 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் உள்நோக்கக் கடிதத்துடன் பதிவுசெய்யப்பட்ட 100 அடையாளம் காணப்பட்ட கடமைப்பாடுகளை ‘The IMF Tracker’ தற்போது கண்காணித்து வருகிறது. இந்த கடமைப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் காலக்கெடுவை நன்கு புரிந்துகொள்வதற்கும் கண்காணிப்பதற்கும் இந்த தளம் இலங்கை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திற்கும் உதவும்.
இலங்கை பாராளுமன்றத்தின் செயல்பாடுகளையும் செயல்திறனையும் கண்காணிப்பதற்காக வெரிட்டே ரிசேர்ச்சினால் முன்னெடுக்கப்படும் manthri.lk எனும் இணையதளத்தில் ‘The IMF Tracker’ கண்காணிப்பானை பொதுமக்கள் இப்போது பார்வையிடலாம். மேலதிகத் தகவல்களுக்கு https://manthri.lk/en/imf_tracker எனும் இணைப்பைப் பார்வையிடவும்.