கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை… காங்கிரஸ் வெற்றிக்கு மக்கள் இதை செய்தாலே போதும்.. சித்தராமையா அதிரடி!!!
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மோடி அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற முஸ்லீம்கள் உத்தியுடன் செயல்பட்டு வாக்களிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் அது 2024 ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலின் போது, தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளை சார்ந்து இந்த தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருக்கும் 75 வயதான சித்தராமையா, இது தான் தனக்கு கடைசி தேர்தல் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த தேர்தலில் மாநிலத்தின் 90 சதவீத முஸ்லீம் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக மீது மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது என்று மேலும் தெரிவித்தார். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் முதல்வர் பதவியை யார் பெறுவது என்ற விஷயத்தில் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவி வருகிறது. இதுபற்றி சித்தராமையா கூறும் போது, எனக்கும் அவருக்கும் இடையே எவ்வித போட்டியும் இல்லை. யார் வேண்டுமானாலும் அந்த பதவிக்கு போட்டியிடலாம் என்று தெரிவித்தார்.