சீரடி ஆலய உண்டியல்களில் குவியும் நாணயங்களை ஏற்க வங்கிகள் மறுப்பு!!
மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உலக புகழ்பெற்ற சாய்பாபா ஆலயம் உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள சீரடி சாய்பாபாவை வழிபாடு செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சீரடியில் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த பக்தர்கள் குறிப்பிட்ட தொகை காணிக்கையாக செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் நாணயங்களும் அதிக அளவில் சேருகின்றன.
அப்படி சேர்ந்த நாணயங்கள் சீரடியில் உள்ள 10 வங்கிகளிலும், நாசிக்கில் உள்ள ஒரு வங்கியிலும் சீரடி ஆலய டிரஸ்ட் சார்பில் சேமிக்கப்படுகிறது. ஆனால் நாணயங்கள் மூட்டை மூட்டையாக குவிந்துவிட்டதால் இனி சீரடி ஆலய நாணயங்களை ஏற்க முடியாது என்று 11 வங்கிகளும் அறிவித்துள்ளன. இதனால் உண்டியல்களில் உள்ள நாணயங்களை என்ன செய்வது? என்று தெரியாமல் சீரடி ஆலய நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.