ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது!!
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ரெயில் பாதையில் இருந்து சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால் பெங்களூருக்கு செல்லக்கூடிய பயணிகளின் ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால் 5 மணிநேரம் தாமதமாக சென்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விவசாய உர மூட்டைகளை ஏற்றி கொண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு நேற்று இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. அந்த ரெயில் மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக வந்து, தருமபுரி மாவட்டம், தொப்பூர், தருமபுரி, மாரண்டஅள்ளி வழியாக சென்று கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, ஓசூர் வழியாக வந்து பெங்களூருவை அடைவது வழக்கம்.
இந்த நிலையில் அந்த ரெயில் நள்ளிரவு 2 மணியளவில் மாரண்டஅள்ளி வழியாக ராயக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் சக்கரங்களில் தொடர்ச்சியாக தீப்பொறியுடன் புகை வெளியேறி கொண்டிருந்தது. இதை கவனித்த ரெயில்வே ஊழியர் உடனடியாக ராயக்கோட்டை ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர் சரக்கு ரெயில் செல்வதற்கான சிக்னல்கள் ஆப் செய்து விட்டார். திடீரென்று ரெயில்வே பாதையில் சிக்னல்கள் கிடைக்காததால் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து உள்ளது என்று எண்ணி சரக்கு ரெயிலை என்ஜின் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தினார்.
அப்போதுதான் அந்த சரக்கு ரெயில் சக்கரத்தில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறியதை கவனித்த என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சரக்கு ரெயிலின் சக்கரங்களை ஆய்வு செய்தனர். அப்போது 6 பெட்டிகள் ரெயில்வே பாதையில் இருந்து விலகி தடம் புரண்டுள்ளது என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊழியர்கள் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சேலம் ரெயில்வே கோட்டம் மற்றும் பெங்களூரு ரெயில்வே கோட்டம் அதிகாரிகள், போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அதிகாலையிலேயே 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்களை வரவழைத்து ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதையில் இருந்து 6 பெட்டிகளின் சக்கரங்கள் விலகியதற்கான காரணம் என்ன? என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் பெங்களூரு ரெயில்வே கோட்ட அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு செல்லக்கூடிய குர்லா எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில்-பெங்களூரு செல்லக்கூடிய பாசஞ்சர் ரெயில் ஆகிய 3 ரெயில்கள் தருமபுரி, மொரப்பூர் வழியாக ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.