ஆருத்ரா மோசடி: பொதுமக்கள் இழந்த பணத்தை 6 மாதத்தில் திருப்பி கொடுக்க வாய்ப்பு!!
ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2400 கோடி பணத்தை சுருட்டி உள்ளது. இந்த ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றுக்கொடுத்த ஏஜெண்டுகள் 256 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விசாரணையின் முடிவில் சொத்து முடக்கம் மற்றும் கைது நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முடக்கி உள்ளது.
முடக்கப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.100 கோடி மதிப்புள்ள வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும், ரூ.6 கோடி பணம், 4 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல கோடி மதிப்பிலான 130 சொத்துக்களை கண்டுபிடித்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது. இவை அனைத்தையும் முடக்கி அடுத்த 6 மாதத்திற்குள் பொதுமக்கள் இழந்த பணத்தை திருப்பி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.