கருக்கலைப்பு மருந்துக்கு ஜப்பானிய அரசு ஒப்புதல் !!
ஜப்பானில் முதன்முறையாக பெண்களுக்கான கருக்கலைப்பு மருந்துக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜப்பானில் கருக்கலைப்பு என்பது தொடக்க நிலையிலேயே பெண்கள் அறுவை சிகிச்சை செய்வது என்ற அளவில் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது.
ஜப்பானில் கடந்த காலங்களில் உலோக கருவிகள் கொண்டு கருக்கலைப்புகள் நடந்து வந்துள்ளன. இந்த நடைமுறை சற்று சிக்கலானது என்ற நிலையில், கருக்கலைப்பு மருந்துகளை அறிமுகப்படுத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் பலரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் லைன்பார்மா சர்வதேச நிறுவனம் உருவாக்கிய மீபீகோ என்ற மருந்துக்கு ஜப்பானின் சுகாதார அமைச்சகத்தின் மருந்துகள் விவகாரம் மற்றும் உணவு தூய்மைக்கான கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனால், அறுவை சிகிச்சை வழியே கருக்கலைப்பு செய்வதற்கு மாற்றான ஒரு தீர்வாக இது அமையும்.
பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக குரலெழுப்பிய நிலையில், அதில் பலன் ஏற்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இணைய வழியே பொதுமக்களில் 12 ஆயிரம் பேரிடம் இருந்து பெற்ற விமர்சனங்களை இரண்டாம் நிலை குழு ஒன்று சேகரித்து, ஆய்வு செய்த பின்னர், அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இறுதி ஒப்புதலை சுகாதார மந்திரி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பும் இதனை பாதுகாப்பு முறைகளில் ஒன்றாக ஊக்கப்படுத்தி வந்த நிலையில், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.