சுடுகாடாக மாற துடிக்கும் சூடான்.. இந்தியர்களை வெளியேற்ற அவசர திட்டம்! பிரதமர் மோடி அதிரடி உத்தரவு !!
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஏற்கனவே ஒரு இந்தியர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ளோரை பத்திரமாக மீட்க அவசர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கிளர்ச்சி மூலம் அந்நாட்டு அரசை அகற்றிய ராணுவத்தினர் தற்போது தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டிருக்கினர். இந்த சண்டை நாளடைவில் உள்நாட்டு போராக பரிணமித்திருக்கிறது. இந்த போர் காரணமாக நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியர் ஒருவரும் அடக்கம். எனவே மீதமிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக சொந்த நாடுகளுக்கு அழைத்து வர வேண்டும் என்று அவர்களுடைய உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படி இருக்கையில்தான் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சூடானுக்கான தூதர் பிஎஸ் முபாரக் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதில், சூடானில் சிக்கியுள்ள 3000 இந்தியர்களை பத்திரமாக எப்படி மீட்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சூடானில் மாறிவரும் சூழல்கள் மற்றும் இந்தியர்களை வெளியேற்ற தற்செயலான வெளியேற்றத் திட்டங்களைத் தயாரிக்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
சூடான் விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நிலைமையை உன்னிப்பாக கவனித்து உதவி தேவைப்படுவோருக்கு உடனடியாக உதவி செய்திட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல இந்த மோதலில் கடந்த வாரம் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். சூடானில் கடந்த ஒரு வாரத்தில் மோதல் போக்குகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த காலத்தில் மட்டும் சுமார் 413 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 3,500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று ஐநா கூறியுள்ளது. எனவே உடனடியாக போர் நிறுத்தத்திலும் ஈடுபட வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தியுள்ளது.
இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஐநா அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த அழைப்புக்கு சூடான் ராணுவமும், துணை ராணுவமும் ஒப்புதல் தெரிவித்துள்ளதால் இயல்பு நிலை மெல்ல திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 72 மணி நேரத்தில் பொது மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு போகலாம் என்று ஐநா கூறியுள்ளது. என்ன இருந்தாலும் இந்தியர்களை மீட்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஏனெனில் சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள இந்திய தூதரகம் விமான நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிக அளவு குண்டுகள் வீசப்பட்டுள்ளன. எனவே இந்த தூதரகமே தற்போது அச்சத்தில் இருக்கிறது. மக்கள் உணவு, மின்சாரம் மற்றும் பாதுகாப்பான இடம் இன்றி தவித்து வருகின்றனர். உடனடியாக தங்களை மீட்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு வீடியோ மூலம் செய்தி அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.