“இந்தியாவுடன் போர்..” பாகிஸ்தான் சுப்ரீம் கோர்டில் ஷெரீப் அரசு சொன்ன மேட்டர்! பரபரக்கும் சூழல்!!
பாகிஸ்தான் நாட்டில் இப்போது இக்கட்டான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா உடனான போர் அபாயம் குறித்து அங்குள்ள ஷெரீப் அரசு அந்நாட்டின் சுப்ரீம் கோர்டில் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மிகவும் இக்கட்டான ஒரே சூழல் நிலவி வருகிறது. அங்கே இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பதிலாக ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் பதவிக்கு வந்தார்.
அப்போது முதலே அங்குக் குழப்பம் தான். ஒரு பக்கம் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்றொரு பக்கம் பாகிஸ்தான் ஆளும் அரசுக்கு எதிராக இம்ரான் கான் நாடு முழுக்க பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தேர்தல் தொடர்பான வழக்கு அங்கே உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அரசு நீதிமன்றத்தில் கூறுகையில், பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமின்மை, பயங்கரவாதம் அதிகரிப்பு, இந்தியாவுடனான முழுமையான போரின் அச்சுறுத்தல் ஆகியவை தான் பஞ்சாபில் மாகாணத் தேர்தலை நடத்தத் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், அரசியல் ரீதியாக முக்கியமான பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் என்பது பாகிஸ்தானில் பிரச்சினைகளைத் தூண்டும் என்றும், இனப்பிரச்சினை, தண்ணீர் தகராறு உள்ளிட்ட பிற பிரச்சினைகளை இந்தியா சாதகமாக்கிக்கொள்ள முயலும் என்றும் அது தெரிவித்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளது.
கோரிக்கை: பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் சட்டசபைத் தேர்தலை நடத்தினால், பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்ற அச்சம் இருப்பதால் உச்ச நீதிமன்றத்தின் தேர்தல் தேதி குறித்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு பஞ்சாப் சட்டசபைக்கு மே 14ஆம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அக்டோபர் வரை அந்நாட்டின் தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்ட நிலையில், அதை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. பல்வேறு பிரச்சினைகள்: எல்லை தாண்டிய பயங்கரவாதம், நாட்டில் ஸ்திரமின்மை, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் (TTP), இஸ்லாமியத் தேசம் போராளிகள் பிரச்சினை ஆகியவற்றை காரணங்களாக அந்நாட்டு அரசு நீதிமன்றத்திடம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, இந்திய உளவு அமைப்புகளின் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் அண்டை நாடான இந்தியா உடன் முழு வீச்சில் போர் நடக்கவும் வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் ஒரே நேரத்தில் படைகளை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. சர்வதேச அரசியலின் விளையாட்டிற்குப் பாகிஸ்தான் தொடர்ந்து பலியாகிவிடும் என்று அஞ்சுவதாகவும் இதில் இந்தியாவுக்கு லாபம் கிடைக்கும் என்பதாலேயே தேர்தலை நடத்தக் கால அவகாசம் கேட்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டிலும் பிரச்சினை தான்: வெளிநாடுகளின் பிரச்சினைகள் மட்டுமின்றி, உறுதியற்ற தன்மையாலும் பாகிஸ்தான் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இந்த இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு புதிய பயங்கரவாத அலை உருவாகியுள்ளதாகவும், ஜனவரி 2022 முதல் ஏப்ரல் 2023 வரை சுமார் 150 அச்சுறுத்தல் எச்சரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அவற்றில், 78 அச்சுறுத்தல்கள் பயங்கரவாத எதிர்ப்பு அல்லது உளவுத்துறை நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்பட்டன என்றும் அதேநேரம் எட்டு அச்சுறுத்தல்களைத் தடுக்க முடியவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கால அவகாசம் தேவை: பஞ்சாபிலும், குறிப்பாக தெற்கு பஞ்சாபிலும், இஸ்லாமாபாத்திலும் பயங்கரவாதக் குழுக்களின் ஸ்லீப்பர் செல்கள் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஐஎஸ் குழுவைச் சேர்ந்த பல தீவிரவாதிகளும், சிரியா, ஏமன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் பாகிஸ்தானுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்குச் சீனா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான ஏற்பட்ட புரிந்துணர்வு ஆறு முதல் எட்டு மாதங்களில் சிறந்த முடிவுகளைத் தரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தங்களுக்குத் தேர்தல் நடத்தக் கூடுதல் அவகாசம் தேவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பஞ்சாபில் ஒரு பரபரப்பான சூழல் நாட்டில் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்றும், பஞ்சாபில் பல அச்சுறுத்தல் எலர்டுகள் வந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.