உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் இருந்து வெளிநாட்டவர், தூதர்கள் பத்திரமாக வெளியேற்றம்: பணியை தொடங்கியது ராணுவம்!!
சூடானில் இருக்கும் பல்வேறு நாடுகளின் தூதர்களையும், வெளிநாட்டவர்களையும் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். சூடானில் கடந்த ஒரு வாரமாக உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியாக சூடானில் இருக்கும் தங்களது நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அவர்களை வெளியேற்றுவதில் சிக்கல் நீடித்து வருகின்றது.
இந்நிலையில் சூடானில் இருக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை ராணுவ விமானங்களில் நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து வருவதாக சூடான் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் தலைவர்களுடன் ராணுவ தளபதி அப்தெல் ஆலோசித்து வருவதாகவும் சூடான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது. சூடான் ராணுவ தளபதி ஜெனரல் அப்தெல் பட்டாக் புர்ஹான் கூறுகையில், ‘‘சவுதி அரேபியாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் ஏற்கனவே போர்ட் சூடானில் இருந்து விமானம் மூலமாக அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜோர்டான் தூதரக அதிகாரிகளும் இதேபோல் வெளியேற்றப்படுவார்கள்’’ என்றார்.