;
Athirady Tamil News

ஓ.பி.எஸ். நடத்தும் மாநாடு வரலாறு படைக்கும்- பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி!!

0

ஓ.பி.எஸ். அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. இதனைப் பார்வையிட்ட அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- 1956-ல் அண்ணா திருச்சியில் மாநாடு நடத்தினார். அந்த ஆண்டு தான் நான் தி.மு.க.வில் இணைந்தேன். அந்த மாநாட்டில் தான் தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்கிற வாக்கெடுப்பு நடந்து தி.மு.க. தேர்தல் நடந்தது. 67 ஆண்டுகளுக்கு பிறகு அறிஞர் அண்ணா வழியில் இந்த மாநாடு நடக்க உள்ளது. இது வரலாற்றை படைக்கும் மாநாடாக இருக்கும். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைந்த என்கிற பேச்சுக்கே இடமில்லை. எம்.ஜி.ஆரிடம் உங்கள் அரசியல் வாரிசு யார் என கேட்ட போது அ.தி.மு.க.வின் தொண்டர்கள் தான் என் அரசியல் வாரிசு என்றார். அந்த வழியில் தொண்டர்களை அழைத்து உங்கள் இயக்கத்தை நீங்களே நடத்துங்கள் என கூறுவதற்கு தான் இந்த மாநாடு. ஒரு சிலர் பொதுக்குழுவை அவர்களே நியமித்து தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார்கள்.

அது இட்டுக்கட்டிய சிறு கும்பல். அவர்களுக்கும் இந்த இயக்கத்துக்கும், தொண்டர்களுக்கும் சம்மதமில்லை. அ.தி.மு.க. தனி தன்மை வாய்ந்தது. தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். தேர்தல் கமிஷன் சின்னம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் இங்கு நிர்வாகம் முடங்கவே இல்லை. ஒருங்கிணைப்பாளருக்கு முரணாக செயல்பட்டால் அந்த பொதுக்குழுவை கலைக்க ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது. அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லையோ என தோன்றுகிறது. அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆருக்கு கொடுத்தது. அது எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமானது அல்ல, அந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் உரியது. எங்கள் தலைவரும், அண்ணியாரும் எங்களுக்கு கொடுத்த சீதனம் இது. திருச்சியில் நாளை நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் பங்கேற்பு குறித்து தற்பொழுது உறுதியாக எதுவும் கூற முடியாது.

ஒரு கட்சியிலிருந்து மற்றொருவர் வேறொரு கட்சிக்கு சென்றால் அது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. கட்சி இயங்குவதற்கு தொண்டர்கள் முக்கியம், அதை வெற்றி பெற செய்ய மக்கள் ஆதரவு முக்கியம். அ.தி.மு.க.வில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறதா, ஓ.பி.எஸ்.க்கு இருக்கிறதா என்பதை நாளை மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் எங்கள் மாநாட்டிற்கு மட்டுமல்ல அ.தி.மு.க.விற்கே முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.