பிலிப்பைன்சில் 2-ம் உலகப்போரில் மூழ்கிய ஜப்பான் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!!
2-ம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலக்கட்டமான 1942-ம் ஆண்டு ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான ‘மான்டிவீடியோ மாரு’ என்ற கப்பல் நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலிய போர் கைதிகளை ஏற்றிக்கொண்டு பப்புவு நியூ கினியாவில் இருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த கப்பல் பிலிப்பைன்ஸ் நாட்டு கடலில் சென்றபோது, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் அதனை தாக்கியது. ஆஸ்திரேலிய போர் கைதிகள், ஜப்பான் ராணுவ வீரர்கள் மற்றும் நார்வே மாலுமிகள் என 1,089 பேருடன் கப்பல் கடலில் மூழ்கியது. இது இன்றளவும் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான கடல்சார் பேரழிவாக பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த பேரழிவு நிகழ்ந்து 81 ஆண்டுகளுக்கு பிறகு கப்பலின் சிதைவுகளை தேடும் பணி கடந்த 6-ந் தேதி தொடங்கியது.
புக்ரோ என்ற நெதர்லாந்து ஆழ்கடல் ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய கடல்சார் தொல்லியல் குழுவான சைலன்ட்வேர்ல்ட் அறக்கட்டளை, இந்த பணியை மேற்கொண்டது. உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பணி தொடங்கிய 14 நாட்களுக்கு பிறகு கடலின் மேல்மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 123 அடி ஆழத்தில் கப்பலின் சிதைவுகள் கண்டு பிடிக்கப்பட்டன.