பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!!
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா வருகிறார். கொச்சியில் இன்று மாலையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், திருவனந்தபுரத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக மாநில அரசு சார்பிலும், பா.ஜனதாவினர் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரம் மாநிலத்தில் பிரதமர் செல்லும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கேரளா வரும் பிரதமர் மோடி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த உள்ளதாக கொச்சியை சேர்ந்த ஜோணி என்பவர் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்திருந்தது.
மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதம் மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரனுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை, அவர் மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணையில் இறங்கினர். கேரள போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் என பல்வேறு விசாரணை அமைப்புகள் மும்முரமாக விசாரித்து வந்தன. இதன் பலனாக, மேற்படி கடிதம் அனுப்பியவரை நேற்று அதிகாரிகள் மடக்கினர். கொச்சியை சேர்ந்த சேவியர் என்ற அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கொச்சியில் வர்த்தகம் செய்து வரும் சேவியர், ஜோணி என்பவர் மீது தனக்கிருந்த தனிப்பட்ட பகை காரணமாக அவரை போலீசில் மாட்டி விடுவதற்காக இந்த கடிதத்தை எழுதியிருந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கொச்சி போலீஸ் கமிஷனர் சேதுராமன் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை அறிவியல் பூர்வமாக விசாரித்து, கொலை மிரட்டல் கடிதம் எழுதியவரை கைது செய்துள்ளோம். இது ஒரு தனிப்பட்ட பகை தொடர்பானது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த நபரை போலீசார் கைது செய்ய வேண்டும் என குற்றவாளி விரும்பி இருக்கிறார்’ என தெரிவித்தார். முன்னதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஜோணி என்பவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தான் ஒரு அப்பாவி என்று கூறினார்.
போலீசார் தன்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாக கூறிய அவர், தனது கையெழுத்து உள்ளிட்ட விவரங்களை போலீசார் ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தார். அதேநேரம் தங்களுக்கு சேவியர் மீது சந்தேகம் இருப்பதாக ஜோணியின் குடும்பத்தினர் போலீசாருக்கு தெரிவித்து இருந்தனர். ஒரு ஆலய விவகாரம் தொடர்பாக அவர்களுக்கு இடையே பகை இருந்தததையும் அவர்கள் போலீசாரிடம் கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து சேவியரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவரே ஜோணியின் பெயரில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தது தெரியவந்தது.
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டிருப்பது கேரள போலீசாருக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடி வருகையையொட்டி கொச்சியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். மேலும் பிரதமர் இன்று பங்கேற்கும் பேரணியில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.