தப்புலவுக்கு ரீஐடி மீண்டும் அழைப்பு !!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அவர் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குவதற்காக திங்கட்கிழமை (24) பயங்கரவாத விசாரணைப் பிரிவு (ரீஐடி) முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் லிவேராவை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் ஆஜராகத் தவறியதையடுத்து, மீண்டும் மூன்றாவது தமவைாக அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதியன்று, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் ஒருவரை சாட்சியாக அழைப்பது சட்டத்தை மீறும் செயலாகும் என்று 12 விடயங்களை மேற்கோள் காட்டி தனது கனிஷ்ட சட்டத்தரணி ஊடாக ஏழு பக்க ஆட்சேபனை கடிதத்தை லிவேரா சமர்ப்பித்தார்.
மேலும், 21ஆம் திகதியன்றும் அவர் ஆஜராகாத நிலையில், அவரது ஆட்சேபனைக் கடிதத்துக்கு பதிலளித்துள்ள ரிஐடி, திங்கட்கிழமை ரிஐடிக்கு வருகை தரத் தவறினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பாரிய சதித்திட்டமொன்று காணப்படுவதாக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற விதம், நேரம், தினம் மற்றும் ஏனைய விடயங்கள் அரச புலனாய்வுச் சேவைக்கு கிடைத்தமையின் ஊடாக பாரிய சதித்திட்டமொன்று இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றமை வௌிப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
இந்த பாரிய சதித்திட்டத்துடன் தொடர்புடைய அனைவரும் சாட்சியங்களின் ஊடாக வௌிப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.