தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு நிறுத்தி வைப்பு – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!!!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று “2023 -ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் இன்று (24-4-2023) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசளை மேற்கொண்டனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமுன்வடிவின் முக்கியமான பிரிவுகளில், குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து, அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல், தொழிலாளர்களுக்குப் போக்குவரத்து வசதி உள்ளிட்ட தொழிலாளர் நலன்கள் குறித்தும், இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் விரிவாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் உள்ள மிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும், தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சர் பெருமக்கள் எடுத்துரைத்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறதோ, அப்போதெல்லாம். தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. தற்போது அதே சிந்தனையைத் தாங்கி, கலைஞர் வகுத்துத் ‘தந்த பாதையில் அதன் அடியொற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு ஒரு சட்டமுன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகின்றதோ, அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால், அவற்றைச் சீர்தூக்கி ஆராய்ந்து, அவர்களின் கருத்துக்களுக்கிணங்க, அவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதிலும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும். அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.