திருச்சியில் ஒபிஎஸ் தலைமையில் பிரமாண்ட மாநாடு- தொண்டர்கள் குவிந்தனர்!!
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு கட்சிக்கு உரிமை கொண்டாடினர். இந்த அதிகாரப்போட்டியில் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமையகத்தை கைப்பற்றினார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
அத்துடன் கட்சியின் நிர்வாகிகள் வேண்டுமானால் அவர்களிடம் இருக்கலாம், ஆனால் தொண்டர்கள் ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது. அத்துடன், தொண்டர்களின் ஆதரவு இருப்பதை காட்டும் வகையில் திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்தனர். அதன்படி திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள், அ.தி.மு.க. 50-வது ஆண்டு நிறைவு விழா எனும் முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடக்கிறது.
அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., ஐயப்பன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிந்துள்ளனர். தொண்டர்கள் மாநாட்டு நிகழ்வுகளை எளிதில் பார்வையிடுவதற்காக ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு நகர்வுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.