கைத்தறி, கைவினைப் பொருள், உணவு வகைகளுடன் ‘சென்னை விழா’!!
தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் சென்னையில் வருகிற 29-ந்தேதி முதல் மே 14-ந்தேதி வரை சென்னை விழா நடக்கிறது. இந்த சென்னை விழாவில் கைவினைப் பொருட்கள், கைத்தறி வகைகள் மற்றும் உணவுத் திருவிழா ஆகியவை இடம் பெறுகிறது. இதில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் பங்கேற்கிறார்கள். ரூ.1.50 கோடி செலவில் மிக பிரமாண்டமாக இந்த சென்னை விழா நடத்தப்படுகிறது. இது தொடர்பாக சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:- “சென்னை விழா”வில் நடைபெறும் கண்காட்சியில் வங்காளதேசம், பூடான், ஈரான், நேபாளம், நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, கிர்கிஸ்தான், உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த கைவினைஞர்கள் தங்கள் சொந்த நாட்டு கைவினைப் பொருட்களை காட்சிப் படுத்துவார்கள்.
இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கைவினைப் பொருட்களை 80 அரங்குகளில் வைத்திருப்பார்கள். தமிழகத்தில் இருந்து 70 ஸ்டால்களும் இடம் பெறுகின்றன. தமிழகத்தில் புவியியல் குறியீடு பெற்ற பொருட்களும் இங்கு முன்னிலைப் படுத்தப்படும். சில தயாரிப்புகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது தொடர்பாகவும் கண்காட்சியில் செய்து காட்டப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.