;
Athirady Tamil News

ஆப்ரேஷன் காவிரி.. இந்தியர்களை மீட்க சூடான் பறந்த 2 ஜம்போ போர் விமானங்கள்.. மத்திய அரசு அதிரடி !!

0

சூடானில் உள்நாட்டு போரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆப்ரேஷன் காவிரி’ செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டிலிருந்து வெளிநாட்டினர் வெளியேறி செல்ல கிளர்ச்சியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கிளர்ச்சி மூலம் அந்நாட்டு அரசை அகற்றிய ராணுவத்தினர் தற்போது தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த சண்டை நாளடைவில் உள்நாட்டு போராக பரிணமித்திருக்கிறது. இந்த போர் காரணமாக 420 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியரும் ஒருவராவார். அதேபோல 3,700 பேர் காயமடைந்துள்ளார். எனவே சூடானில் சிக்கியுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை மீட்க உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதனையடுத்து தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அந்நாட்டு ராணுவமும், துணை ராணுவமும் அனுமதியளித்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மற்ற நாடுகள் தங்களின் குடிமக்களை பத்திரமாக திரும்பப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவும் இந்த நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. சூடானில் சுமார் 3000க்கும் அதிகமான இந்தியர்கள் இருக்கின்றனர். இவர்களை எப்படி பத்திரமாக மீட்டு கொண்டு வருவது என்பது குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இதில் ‘தற்செயலான வெளியேற்றத் திட்டத்தை’ தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், சூடான் விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நிலைமையை உன்னிப்பாக கவனித்து உதவி தேவைப்படுவோருக்கு உடனடியாக உதவி செய்திட வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்தியர்களை மீட்க 2 போர் விமானங்கள் மற்றும் ஒரு கப்பல் சூடானுக்கு விரைந்திருக்கிறது. இந்த திட்டத்திற்கு ‘ஆப்ரேஷன் காவிரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவை போலவே மற்ற நாடுகளும் மீட்பு பணியை தொடங்கியுள்ளன. பிரான்ஸ் நாட்டின் ராணுவம் இந்தியர்கள் உட்பட 28 நாடுகளை சேர்ந்த 388 பேரை மீட்டிருந்தது. இதனையடுத்து மீட்பு பணிகள் குறித்து ட்வீட் செய்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் காவிரி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்தை அடைந்திருக்கின்றனர். நம்முடைய கப்பல் மற்றும் விமானங்களை அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தயாராக இருக்கின்றன. இந்தியர்களை மீட்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இந்த மீட்பு பணிக்காக 2 சி-130ஜே ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் மணிக்கு 600 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவையாகும். அதேபோல சுமார் 20 டன் எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லும் திறன் கொண்ட கொண்டதாகும். இதற்கு முன்னர் பல்வேறு மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த மீட்பு நடவடிக்கைக்கு ‘காவிரி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.