வங்கதேச அதிபராக சஹாபுதீன் பதவியேற்பு!!
வங்கதேசத்தின் 22வது அதிபராக மூத்த அரசியல் தலைவர் முகமது சஹாபுதீன் பதவியேற்றார். வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து, புதிய அதிபருக்கான தேர்தல் நடைமுறைகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. இதில், ஆளும் அவாமி லீக் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மூத்த அரசியல் தலைவர் முகமது சஹாபுதீன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அப்துல் ஹமீது பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்ததைத் தொடர்ந்து புதிய அதிபர் பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது.
இதில், முகமது சஹாபுதீன் வங்கதேசத்தின் 22வது அதிபராக பதவியேற்றார். அவருக்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஷிரின் சர்மின் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், பிரதமர் ஷேக் ஹசீனா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதிய அதிபரான முகமது சஹாபுதீன், மாவட்ட நீதிபதியாகவும், ஊழல் ஒழிப்பு ஆணையராகவும் பணியாற்றியவர்.