புத்தூரில் மருத்துவருக்கு அச்சுறுத்தல் – பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!!
வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்து , அவரது கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களை பொலிஸார் கைது செய்ய தவறியமையை கண்டித்து , புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினர் தமது மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 10ஆம் திகதி புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு அருகில் நடாத்தப்பட்ட தாக சாந்தி நிலையத்தில் சத்தமாக பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன.
அதானல் தனது கடமைக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பாடலின் சத்தத்தை குறைக்குமாறும் தாக சாந்தி நிலையத்தில் நின்றவர்களிடம் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அதனை அவர்கள் பொருட்படுத்தாது இருந்துள்ளனர். அதன் பின் குழு ஒன்று மருத்துவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
அதனை அடுத்து மருத்துவர் , தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாடு செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் கடந்த நிலையிலும் இதுவரை பொலிஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காதமையை கண்டித்தும் , மருத்துவருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைது செய்யுமாறும் , சுகாதார பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் கோரி தமது மருத்துவ சேவைகளை புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.