;
Athirady Tamil News

இன்றைய போராட்டம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளது – பா.கஜதீபன்!!

0

சர்வதேச நாணய நிதியம் போன்ற இலங்கைக்கு உதவி வழங்கும் தரப்பினருக்கும், இன்றைய போராட்டம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென்பதுடன், ஆட்சியாளர்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அதிருப்தியில் உள்ளனர் என்ற செய்தி தெளிவாக சொல்லப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்.

இன்றைய கதவடைப்பின் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ள செய்தியை புரிந்து கொண்டு, தமிழ் காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்து, அரசியல் வழிமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் இன்று மேற்கொள்ளப்பட்ட கதவடைப்பு போராட்டம் பெரு வெற்றியீட்டியதை தொடர்ந்து, வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில்,

இன்றைய கதவடைப்பு போராட்டத்துக்கு 7 கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அவர்கள் அழைப்பு விடுத்ததே தவிர, இந்த போராட்டத்தை வெற்றியடைய செய்தது தமிழ் தேசிய உணர்வுள்ள பொதுஅமைப்புக்களும், சங்கங்களும், மக்களுமே.

தமிழ் தேசிய உணர்விலேயே தொடர்ந்தும் பயணிக்கிறோம் என்பதை மக்கள் இன்று மீண்டும் சர்வதேச சமூகத்துக்கும், தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும், வடக்கு கிழக்கிலுள்ள அரச முகவர்களுக்கும் தெளிவாக புரிய வைத்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் போன்ற இலங்கைக்கு உதவி வழங்கும் தரப்பினருக்கும், இன்றைய போராட்டம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென்பதுடன், ஆட்சியாளர்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அதிருப்தியில் உள்ளனர் என்ற செய்தி தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

இதனால்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதற்றமடைந்து, இந்த போராட்டம் தேவையற்றது என்றார்.

மஹிந்த ராஜபக்சவும் போராட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அவருடன் இணைந்து, அங்கஜன் இராமநாதனும் இவ்வாறான கருத்தை தெரிவித்திருப்பதில் நாம் ஆச்சரியமடையவில்லை.

இன்றைய கதவடைப்பு போராட்டத்தினால் மக்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்ந்து விடாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். விடுதலைப் பயணமென்பது நீண்ட மரதன் ஓட்டமென்பது, எமது மக்களிற்கு யாரும் சொல்லி புரிய வைக்க வேண்டிய விடயமல்ல. இந்த பயணத்தின் எமது மக்கள் சந்தித்த துன்பங்களும், துயரங்களும் அளப்பறியது. இன்னும் அவை அறவில்லை.

இன்றைய போராட்டத்தினாலும், பலர் ஏதோவொரு அசௌகரியப்பட்டிருக்கக்கூடும். என்றாலும், தேசியத்தின் பெயராலும், இனவிடிவின் பெயராலும், இன ஒற்றுமையின் பெயராலும் அதை தாங்கிக் கொள்ளும் சக்தியுடன்தான் அவர்கள் இன்னுமிருக்கிறார்கள் என்பதை புரிய வைத்துள்ளனர்.

அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை வகிப்பதவர்கள் கூட, தமிழ் மக்களின் எழுச்சியை பார்த்து பயந்து பதுங்கியிருந்த போது, அப்போதைய ஐ.தே.க அரசில் இணைந்து அமைச்சுப் பதவியேற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசினர் இப்பொழுது இந்த போராட்டத்தை பகிரங்கமாகவே எதிர்த்தனர். அவர்களின் அரசியல் வரலாறு காலம்காலமாக இதுதான்.

இன்றைய போராட்டத்தின் வெற்றி, தென்னிலங்கை தரப்புக்கு மட்டுமல்ல, தென்னிலங்கை பேரினவாத தரப்ர்க்கள் விரும்புவம் நிகழ்ச்சி நிரலை வடக்கு, கிழக்கில் செயற்படுத்திக் கொண்டிருக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் ஒரு செய்தியை சொல்லியுள்ளது.

தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியாக செயற்பட்டாலே ஆதரிப்போம் என மக்கள் வெளிப்படுத்தியுள்ள இந்த செய்தியை, தமிழ் தரப்புக்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். முக்கியமாக இந்த செய்தி அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கே வழங்கப்பட்டுள்ளது.

13வது திருத்தம் தமிழ் மக்களின் இறுதித்தீர்வு என கூறி இன்றைய கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை. 13தான் இறுதித்தீர்வு என கூறுபவர்களும் இன்றைய கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை. என்றாலும், உடனடி சாத்தியமான 13ஐ பெற்று, தமிழ் மக்களை தற்காப்பு நிலையிலாவது பலப்படுத்த வேண்டுமென்பதே சாத்தியமான அரசியல் அணுகுமுறை. 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் தற்போது எதிர்கொண்டுள்ள மத, தொல்லியல் ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்தலாம்.

என்றாலும், 13வது திருத்தமும் வேண்டாம் என சொல்பவர்களும் இதே தரப்பினர்தான் என்பதையும் கவனிக்க வேண்டும். பொதுஜன பெரமுன, ராஜபக்ஷக்கள், சரத் வீரசேகர, விமல் வீரவன்ச போன்ற தென்னிலங்கை தரப்புக்களுடன், தமிழ் தரப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம் அதை எதிர்க்கிறது.

இன்றைய கதவடைப்பின் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ள செய்தியை புரிந்து கொண்டு, தமிழ் காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்து, அரசியல் வழிமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹர்த்தால்!! (PHOTOS)

இன்று வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்!!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராகவும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் ஹர்த்தால்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.