மசோதாக்களை கவர்னர்கள் கிடப்பில் போடக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பு!!
தமிழ்நாடு, தெலுங்கானா என பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில், சட்டசபைகளில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களுக்கு கவர்னர்கள் விரைவான ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலம் கிடப்பில் போடுவது விவாதப்பொருளாகி உள்ளது. இதனால், மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் வழங்குவதற்கு மத்திய அரசும், ஜனாதிபதியும் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில், கடந்த 10-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இதேபோன்று, முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆளுகிற தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கிடப்பில் போடுகிறார் என்ற புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தெலுங்கானா அரசு வழக்கு போட்டது. அந்த வழக்கில், “தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 10 மசோதாக்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்” எனவும், “மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவு எடுப்பதற்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோரை கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தெலுங்கானா மாநில அரசின் சார்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதாடினார். அவர், “மசோதாக்களை கவர்னர்கள் கிடப்பில் போடுகிற பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒரு முடிவு கட்ட வேண்டும். அரசியல் சாசனம் பிரிவு 200, மசோதாக்களை கவர்னர்கள் கிடப்பில் போடக்கூடாது என்று சொல்கிறது” என வாதிட்டார். அவரது வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:- மாநிலங்களின் அரசியல் சாசன தலைமை (கவர்னர்), அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவை மனதில் கொள்ள வேண்டும். ஒப்புதலுக்காக மசோதாக்கள் அனுப்பப்படுகிறபோது, அவற்றைக் கிடப்பில் போடக்கூடாது. தங்களுக்கு ஒப்புதல் இல்லாத மசோதாக்களை, சட்டசபையின் மறு ஆய்வுக்காக கவர்னர்கள் கூடிய விரைவில், அதற்கான குறிப்புடன் திருப்பி அனுப்பி விட வேண்டும். ‘கூடிய விரைவில்’ என்று சொல்கிறபோது, அது குறிப்பிடத்தக்க ஒரு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இதை கவர்னர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். அதே நேரத்தில் தெலுங்கானா கவர்னரிடம் இருந்து கிடைத்துள்ள தகவல், அவரிடம் எந்த மசோதாவும் கிடப்பில் இல்லை என்று கூறுகிறது என கவர்னர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். அதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட், “யாரையும் குறிப்பிட்டு நாங்கள் கருத்து கூறவில்லை. கோர்ட்டு பொதுவாகத்தான் அரசியல் சாசன சட்டம் கூறி இருப்பதை சுட்டிக்காட்டுகிறது” என தெரிவித்தார்.