20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வாகனம்… மாவோயிஸ்ட் தாக்குதலில் 10 போலீசார் பலி.. அதிர்ச்சி பின்னணி !!
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம், தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறையை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் வாகனம் வரும் வழியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 10 போலீஸ்காரர்கள், போலீசார் சென்ற வாகனத்தின் டிரைவர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்துவதற்கு மாவோயிஸ்டுகள் 50 கிலோ எடையுள்ள வெடிகுண்டை பயன்படுத்தி உள்ளனர்.
இதனால் அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் போலீசார் வந்த வாகனம் 20 அடி தூரத்தற்கு தூக்கி வீசப்பட்டு சின்னாபின்னமாக சிதைந்தது. வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. சாலையோரத்தில் நின்றிருந்த சில மரங்கள் வேருடன் சாய்ந்தன. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின்படி அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றுள்ளனர்.
ரோந்துப் பணி முடிந்து திரும்பியபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்களை தேடும் பணியில் சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, சத்தீஸ்கர் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தார்.