பா.ஜனதா வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்?: நிர்மலா சீதாராமன் பேட்டி!!
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலபுரயில் நேற்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கா்நாடக சட்டசபை தேர்தல் மிக முக்கியமானது. வருகிற 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். நாங்கள் அனைவரையும் உள்ளக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். பிரதமர் மோடி வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாதந்தோறும் ஆய்வு நடத்துகிறார். மத்திய அரசின் திட்டங்கள் மாவட்டங்களை சென்றடைகிறதா?
என்பது குறித்து சம்பந்தப்பட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். கர்நாடகத்துடன் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி மோடி அழைத்து செல்கிறார். பா.ஜனதா வெற்றி பெற்றால் சட்டசபை தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூடி புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வார்கள். தற்போது உள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவரை மீண்டும் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுப்பது குறித்து இப்போதும் எதுவும் கூற முடியாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.