கர்நாடகத்தில் பிரதமர் மோடி 6 நாட்கள் பிரசாரம்- இன்று 50 லட்சம் தொண்டர்களுடன் பேசுகிறார் !!
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்பதால், பிரதமர் மோடி மாநிலத்தில் தொடர் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே 7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி பல ஆயிரம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்திருந்தார். இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் பிரதமர் மோடி 6 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
குறிப்பாக 16 மாவட்டங்களுக்கு செல்லும் அவர், 23 இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ உள்ளிட்டவற்றில் பங்கேற்று பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். இந்த 6 நாட்களும் 3 கட்டங்களாக பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். முதற்கட்டமாக வருகிற 29-ந் தேதி கர்நாடகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, அன்றைய தினம் பீதர் மாவட்டம் உம்னாபாத், பெலகாவி மாவட்டம் குடச்சி, விஜயாப்புரா மாவட்டத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார் மேலும் வருகிற 29-ந் தேதி பெங்களூருவில் நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அன்றைய தினம் இரவு அவர் பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் வருகிற 30-ந் தேதி கோலார், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா, ஹாசன் மாவட்டம் பேளூருவில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார். அன்றைய தினம் மைசூருவில் நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவிலும் அவர் பங்கேற்கிறார்.
அதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக வருகிற 2-ந் தேதி சித்ரதுர்கா மாவட்டம், விஜயநகர் மாவட்டம், ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூருவில் பொதுக்கூட்டங்களிலும், கலபுரகியில் ரோடு ஷோவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர் வருகிற 3-ந் தேதி மங்களூரு அருகே மூடபித்ரி, கார்வார், பெலகாவி மாவட்டம் கித்தூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக மே மாதம் 6-ந் தேதி கலபுரகி மாவட்டம் சித்தாபுரா, மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு, துமகூரு, பெங்களூரு தெற்கு தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்.
மறுநாள் (7-ந் தேதி) பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி, ஹாவேரி, சிவமொக்கா மற்றும் பெங்களூருவில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதற்கிடையில், சட்டசபை தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள 50 லட்சம் பா.ஜனதா தொண்டர்கள், பூத் மட்டத்திலான தலைவர்களுடன் இன்று காலை (வியாழக்கிழமை) ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடி பேசுகிறார். அதாவது மாநிலத்தில் உள்ள 58 ஆயிரத்து 112 பூத் மட்டத்திலான தொண்டர்கள், 1,680 மாவட்ட பஞ்சாயத்து மட்டத்திலான தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச உள்ளார்.