;
Athirady Tamil News

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு!!

0

கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில் தனிமையில் இருந்த இளம் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆய்வகத்தை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை. இதனால் அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை எலி கடித்தது தெரியவந்தது. எலி மூலம் கொரோனா பரவியதா என அப்போது பெரும் கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எலிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எலிகளுக்கு டெல்டா ஒமைக்ரான் வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மற்றும் பிற இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அவர்கள் எலிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில் எலிகளிடமிருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தோன்றியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மனிதர்களை பாதிக்கும் தொற்று நோய்கள் விலங்கிலிருந்து பரவ வாய்ப்பு உள்ளது என்பதை ஒட்டுமொத்த ஆராய்ச்சி காட்டுகிறது. விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களில் தொற்று நோய்கள் அவைகளுக்குள் வேகமாக பரவி பின்னர் மனிதனுக்கு பரவுகிறது. பின்லாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் நோயால் எலிகள் எளிதில் பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டில் வெள்ளெலிகளுக்குள் ஒமைக்ரான் வைரஸ் ஒன்றுக்கொன்று பரவி பின்னர் அவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவியது தெரியவந்துள்ளது.

எலிகளிடமிருந்து மனிதர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவினாலும் எலிகளுக்கு இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்று கேள்வி எழுந்துள்ளது. எலிகள் நெருக்கமாக வசிக்கும் போது அவை எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றன. அதன் மூலம் மனிதனுக்கு காற்றில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. இதில், நியூயார்க்கில் சாலைகளில் சுற்றித்திரியும் எலிகள் 3 வகையான உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.

இங்கு 79 எலிகளை சோதனை செய்ததில், 16 எலிகளுக்கு, கொரோனா தொற்றின் உருமாறிய வகைகளான ஆல்பா, டெல்டா, ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ‘பாலுாட்டி விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்’ என அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் இது அரிதானது. எனவே, இது குறித்து குழப்பமடைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.