யாழில் மற்றுமொரு விஹாரைக்கு கலசம் வைப்பு!!
யாழில் மற்றுமொரு புத்தர் விஹாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு இன்று (27) காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்விற்கு பெருமளவான இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விஹாரை யாழிலேயே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விஹாரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகம் எங்கும் சிறிலங்கா அரசாங்கம் விஹாரைகளை அமைத்து தமிழரின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தி, தமிழரின் இருப்பை முற்றுமுழுதாக இல்லாது செய்யும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், வடதாயகமான யாழின் நாவற்குழிப் பகுதியில் அண்மையில் ஒரு விஹாரை அமைக்கப்பட்டு அதற்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை கச்சதீவில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை குறித்த இடத்திலிருந்து அகற்றி விட்டதாக சிறிலங்கா கடற்படை யாழ். ஆயர் இல்லத்திற்கு அறிவித்திருந்தது.
ஆகவே, கச்சதீவிலிருந்து அகற்றப்பட்ட புத்தர் சிலை யாழில் பிரதிஷ்டை செய்யப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தமிழ் மக்களின் காணிகள் வலி வடக்கில் குறிப்பிட்ட அளவு விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று வரை முற்று முழுதாக விடுவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், சிறிலங்கா படையினரால் கையகப்பபடுத்தப்பட்டுள்ள நிலங்களில் தமிழர் அடையாளங்களை அழித்து அங்கு பௌத்த சின்னங்களை உருவாக்கி பிரதிஷ்டை செய்யும் செய்பாடுகள் மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் இடம் பெறுகின்றன.
அதேபோன்றே தையிட்டிப் பகுதியிலும் நரசிம்ம வைரவர் கோயிலை விஹாரையாக மாற்றி, பாரியளவிலான கட்டடம் அமைத்து அதற்கு இன்று கலசம் வைக்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.