தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜக முன்னாள் அமைச்சர் – கர்நாடகாவில் சர்ச்சை!!!
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்பட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும் நோக்கில் இந்த பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரசார கூட்டம் தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து அனைவரும் எழுந்து நின்றனர்.
திடீரென குறுக்கிட்ட பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு, கர்நாடக மாநில கீதத்தை பாட சொன்னார். தமிழர்களின் ஆதரவை பெற நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.