ஆளும் கட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பு.. பரபரத்த பாகிஸ்தான் பாராளுமன்றம் – முடிவு என்ன ஆச்சு தெரியுமா?!!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் நீதித்துறை மற்றும் அரசுக்கும் இடையே உள்ள கருத்து மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், திடீர் திருப்பமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வதை நிரூபிக்கும் நோக்கில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் வெளியுறவு துறை மந்திரியுமான பிலாவல் பூட்டோ சர்தாரி அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 180 பேர் வாக்களித்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஷெரிஃப் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட போது 174 வாக்குகளை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. “மியன் முகமது ஷெபாஸ் ஷெரிஃப் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்,” என்று சபாநாயகர் ராஜா பெர்வைஸ் அஷ்ரஃப் அறிவித்தார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்பின் போது அவை உறுப்பினர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மேசையை ஆரவாரமாக தட்டினர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் ஷெரிஃப் அவையில் உரையாற்றிய போது தனக்கு ஆதராவக வாக்களித்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.