“கொடூர வைரஸ்கள்..” சூடான் போராளிகள் கைகளில் சென்ற ஆய்வகம்! அடுத்து என்ன நடக்கும்! இந்தியர்களின் கதி? !!
ஆப்பிரிக்க நாடான சூடானில் மோதல் நடந்து வரும் நிலையில், அங்கே இருக்கும் போராளி குழுக்களில் ஒன்று அங்குள்ள முக்கிய ஆய்வகத்தை ஆக்கிரமித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சூடான் நாட்டில் துணை ராணுவ அதிவிரைவு படைகளுக்கும் சூடான் ஆயுதப் படைகளுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சூடானில் நாட்டில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கடும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீப காலங்களில் அங்கு நடந்த மோதல் சம்பவங்களில் இது மிக மோசமானதாக இருக்கிறது.
சூடான்: ஆப்பிரிக்காவில் முக்கிய நாடான சூடானில் அதிபர் அல் பஷீர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு இருந்த அல் பஷீர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ புரட்சி மூலம் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் என்பவர் ஆட்சியைப் பிடித்தார். அப்போது முதலே சில ஆண்டுகளாக அங்கு ராணுவ ஆட்சியே நடந்து வருகிறது. அதேநேரம் அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராகத் துணை ராணுவ குழுக்கள் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு அவ்வப்போது ராணுவத்திற்கும் கிளர்ச்சியில் ஈடுபடும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்படும். அப்படித்தான், கடந்த சில நாட்களாக ராணுவத்தினரும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொள்கிறார்கள். இரண்டு தரப்புமே எதிர்த்தரப்பே முதலில் தொடங்கியதாக மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்தியர்கள்: அங்கே கணிசமான அளவுக்கு இந்தியர்களும் இருக்கும் நிலையில், அவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஒருவர் படுகொலையும் செய்யப்பட்டுள்ளார். சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அங்கே உதவி மையம் ஒன்றையும் அமைத்துள்ளது. இருப்பினும், சூடானில் தாக்குதல் தொடரும் நிலையில், அங்கே உயிரிழப்பும் 400ஐ கடந்துள்ளது. இதனிடையே சூடான் மோதலில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது அங்கே உள்ள போராளிக் குழுக்கள் வைரஸ்கள் இருக்கும் ஆய்வகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ளனர். இது போரை வேறு மாதிரி எடுத்துச் செல்லும் என்றும் எச்சரித்துள்ளனர்.
வைரஸ்: சூடானில் உள்ள போராளிகள் போலியோ மற்றும் அம்மை உள்ளிட்ட நோய்களின் மாதிரிகளை இருக்கும் சூடான் மத்திய ஆய்வகத்தை ஆக்கிரமித்துள்ளனர், இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சூடானில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி நிமா சயீத் அபிட் கூறுகையில், “போராளிக் குழுக்களில் ஒரு தரப்பு, கொடூர வைரஸ்கள் இருக்கும் ஆய்வகத்தை ஆக்கிரமித்துள்ளனர். இது நமக்கு மிகப் பெரிய உயிரியல் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். இதைச் சரி செய்ய நாம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார். சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையேயான போர் என்றால் எதாவது ஒரு நாட்டிடம் பேசி பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், உள்நாட்டுப் போர் என்பதால் குழப்பம் இருந்தது. இருப்பினும் சவுதி மூலம் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகிறது.