திருப்பதி அருகே வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு- 2 பேர் சிக்கினர்!!
தெலுங்கானா மாநிலம், செகந்தராபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி இடையில் ஒரு இடத்தில் மட்டுமே நின்று செல்கிறது. இதனால் திருப்பதிக்கு வரும் ஏழுமலையான் பக்தர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை செகந்திராபாத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருப்பதி அடுத்த கூடூர் ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
ரெயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் திருப்பதி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ரெயில் மீது கற்களை வீசிய 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரா, தெலுங்கானாவில் வந்தே பாரத் ரெயில் மீது அடிக்கடி கற்கள் வீசி தாக்கும் சம்பவம் நடக்கிறது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.