கர்நாடக சட்டசபை தேர்தல்: 90 வயதான தேவகவுடா 11 நாளில் 42 இடங்களில் பிரசாரம்!!
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மற்ற மாநில முதல்-மந்திரிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து குமாரசாமி மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் 90 வயதான தேவகவுடா பிரசாரம் செய்ய உள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை 11 நாட்கள் மாநிலத்தில் 42 இடங்களில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 90 வயதான தேவகவுடா வாரத்திற்கு ஒருமுறை மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இதனால் உடல் நிலையை கருத்தில் கொண்டு வாரத்தில் ஒருமுறை அவர் ஓய்வெடுப்பது வகையிலும் அவரது பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தேவகவுடா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.