காஷ்மீர் பிரச்னையை எழுப்பியதால் ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!!
ஐநாவில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அடிக்கடி காஷ்மீர் பிரச்னையை அடிக்கடி பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில்,ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி முனிர் அக்ரம் பேசும்போது, ஜம்மு காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி பிரதிக் மாத்தூர் நேற்று பேசுகையில், ‘‘ஜம்முகாஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாக விளங்குகிறது.
இது சம்மந்தமாக எந்த ஒரு தவறான தகவல்களோ, பிரசாரங்கள் அல்லது பேச்சுக்களின் மூலமோ ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதி என்ற நிலையில் இருந்து மாற்ற முடியாது’’ என்று தெரிவித்தார். இதே போல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பியது. அப்போது, பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ்,‘‘ பாகிஸ்தானின் இந்த விஷமத்தனமான பேச்சுகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’’ என்றார்.