பாவத்துக்குள் இழுக்க முயற்சி !!
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தும் கடன்தான் கிடைக்கவுள்ளது. வேறு மாற்று வழிகள் இல்லாவிட்டால் கடன் பெறுவதற்கு நான் எதிர்ப்பு இல்லை. இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றாலும் அப்போது நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட முன்னெரே சென்றுள்ளனர் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் பாவத்தில் எதிர்க்கட்சியினரையும் இணைத்துக்கொள்ளும் ஜனாதிபதி முயல்கின்றார் என்றார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துக்கு 16 தடவைகள், சென்றாலும் அதனை பாராளுமன்றத்தில் முன்வைத்து எதிர்க்கட்சியினரை இணைத்து அதனை நிறைவேற்ற முயற்சிக்கப்படவில்லை. ஆனால் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக மக்கள் மீது சுமத்தும் சுமை மற்றும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் பாவத்தில் எதிர்க்கட்சியினரையும் சேர்ப்பதற்காகவே ஜனாதிபதி இதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதனை நாங்கள் அனுமதிக்க போவதில்லை என்றார்.