ஆட்சி, அதிகாரத்திற்காக சமுதாயத்தை பிளவுப்படுத்த காங்கிரஸ் முயற்சி: பசவராஜ் பொம்மை!!
யாதகிரி மாவட்டம் ஷாகாப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து திறந்த வாகனத்தில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுப்படுத்தியது. பிறகு சமுதாயத்தை உடைக்க முயன்றது. வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க நினைத்த முயற்சியும் காங்கிரசுக்கு கைகொடுக்கவில்லை. தற்போதும் காங்கிரசார் மீண்டும் தவறு செய்கிறார்கள். இடஒதுக்கீடு விவகாரத்தில் அக்கட்சி தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கர்நாடகத்தில் காவி அலை வீசுகிறது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே போன்ற அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் பிரசாரத்திற்கு வரட்டும். உள்ளூர் தலைவர்களும் வரட்டும்.
ஆனால் காவி அலையை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி நாட்டை ஆண்டுள்ளது. இனி அந்த கட்சியின் விளையாட்டும், பொய்யும் மக்களிடம் எடுபடாது. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது சாதி வாரி கணக்கெடுப்புக்கு ரூ.130 கோடி செலவிடப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையை அமல்படுத்தவில்லை. அதனை அமல்படுத்த காங்கிரசாருக்கு வலிமை இல்லை. நாங்கள் எஸ்.சி., எஸ்.டி. சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். சமுதாயத்தை உடைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கியுள்ளோம். தேன்கூட்டில் கை வைக்காதீர்கள் என்றனர்.
ஆனால் தேனீக்கள் கடித்தாலும் பரவாயில்லை என மக்களுக்கு எனது தலைமையிலான பா.ஜனதா அரசு நல்லது செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி உடைந்துவிட்டது. அனைத்து சமுதாயத்தினரும் பா.ஜனதாவை ஆதரிக்கின்றனர். இதனால் காங்கிரசார் கடும் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி தருவது உத்தரவாத அட்ைட அல்ல. தேர்தலுக்கு பிறகு அது இருக்காது. ஆட்சி, அதிகாரத்திற்காக சமுதாயத்தை பிளவுப்படுத்தும் வேலையை காங்கிரஸ் செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.