திருமலையில் கோலாகலம்: பத்மாவதி பரிணயோற்சவ முன்னேற்பாடுகள் நிறைவு!!
திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவ முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்தன. திருமலையில் உள்ள நாராயணகிரி கார்டனில் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பத்மாவதி பரிணயோற்சவம் நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் முடித்துள்ளது. திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறையின் மேற்பார்வையில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த 30 பேர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 50 அலங்கார நிபுணர்கள் பரிணயோற்சவ மண்டபத்தை அலங்கரித்ததாக, தோட்டக்கலைத்துறை மேற்பார்வையாளர் சீனிவாசுலு தெரிவித்தார். புனேவைச் சேர்ந்த காணிக்கையாளர் ரூ.24 லட்சத்துடன் அரங்கை பிரமாண்டமாக அமைக்க முன்வந்தார். 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாள் கஜ வாகனத்திலும், 2-வது நாள் குதிரை வாகனத்திலும், கடைசி நாள் கருட வாகனத்திலும் உற்சவர் மலையப்பசாமி வீதிஉலா வருகிறார்.
அவருடன் பரிணயோற்சவ மண்டபத்துக்கு உபய நாச்சியார்கள் தனித்தனி பல்லக்குகளில் வலம் வருகின்றனர். அதன் பிறகு கல்யாண மஹோற்சவம் நடக்கிறது. புராணங்களின்படி சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கலியுகத்தின் ஆரம்ப நாட்களில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இருந்து வெங்கடேஸ்வரராக பூமிக்கு வந்தார். அப்போது நாராயணவனத்தை ஆண்ட ஆகாசராஜன் தனது மகள் பத்மாவதியை வெங்கடேஸ்வரருக்கு திருமணம் செய்து கொடுத்தார். ஆகாசராஜன் வைஷாக சுத்த தசமி அன்று பால்குனி நட்சத்திரத்தில் நாராயணவனத்தில் தனது கன்யாதானம் நிகழ்த்தியதாக வெங்கடாசல மஹாத்யம் கிரந்தம் கூறுகிறது.
பத்மாவதி சீனிவாசரின் மங்களகரமான நிகழ்வை குறிக்கும் வகையில் ஒவ்வொரு வைஷாக சுத்த தசமிக்கு ஒரு நாள் முன்பும் ஒரு நாள் பின்பும் மொத்தம் 3 நாட்களுக்கு பத்மாவதி பரிணயோற்சவம் நடக்கிறது. இந்த விழா 1992-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அன்றைய நாராயணவனத்தின் அடையாளமாக, திருமலை நாராயணகிரி பூங்காவில் பத்மாவதியின் பரிணயோற்சவம் நடப்பது குறிப்பிடத்தக்கது.