ஆபரேசன் காவேரி… சூடானில் இருந்து மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பினர்!!
சூடானில் உள்நாட்டுப் போர் உக்கிரம் அடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்களை அந்தந்த நாடுகள் தொடர்ந்து மீட்டு வருகின்றன. சூடானில் வசித்து வரும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்கு ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 24-ந்தேதி தொடங்கியது. முதலில் சூடானில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்கள் மூலம் சூடான் துறைமுகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
அங்கிருந்து அவர்கள் விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். ஏற்கனவே 4 கட்டமாக 1,360 இந்தியர்கள் நாடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் பத்திரமாக டெல்லி வந்து சேர்ந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் பதிவு செய்து புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.