உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் 367 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு கொடுத்த பா.ஜனதா!!
உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் மே 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தரபிரதேசத்தில் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தங்கள் பலத்தை காட்ட அரசியல் கட்சிகள் முனைந்துள்ளன. இதில் ஆளும் பா.ஜனதாவிடம் பெரிய மாற்றம் தொடங்கியுள்ளது. பாராளு மன்றம், சட்டசபை தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத கட்சியாக பா.ஜ.க. இருந்தது. உத்தரபிரதேசத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெறும் 57 முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வாய்ப்பளித்தது. ஆனால் இந்த முறை இந்த எண்ணிக்கை பல மடங்கு கூடியுள்ளது. பா.ஜனதா தேசிய நிர்வாகிகள் கூட்டம் கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நடை பெற்றது.
இந்த கூட்டத்தில் “சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு எதிராக விமர்சனம் செய்வதை பா.ஜ.க.வினர் தவிர்க்க வேண்டும்” என பிரதமர் மோடி கோரியிருந்தார். உத்தரபிரதேசத்தில் பிற மாநிலங்களை விட அதிக முஸ்லிம்கள் (24 சதவீதம் பேர்) உள்ளனர். இவர்களில் பாஸ்மாந்தா எனும் தொழில் பிரிவு முஸ்லிம்கள் சுமார் 85 சதவீதம் உள்ளனர். இவர்களது வாக்குகளை பா.ஜ.க. குறி வைத்துள்ளது. இங்கு முதல் கட்ட தேர்தலில் 200, இரண்டாம் கட்ட தேர்தலில் 167 முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வாய்ப்பு அளித்துள்ளது. பா.ஜ.க. வரலாற்றில் இவ்வாறு அதிக முஸ்லிம்களுக்கு இது வரை வாய்ப்பு அளிக்கப்பட்டதில்லை. இந்த 367-ல் பாதி வேட்பாளர்கள் வென்றாலும் முஸ்லிம்கள் இடையே தமது செல்வாக்கு உயரும் என பா.ஜ.க. கருதுகிறது.
இது அடுத்தடுத்த தேர்தல்களில் பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் உத்தர பிரதேசத்தில் பல தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகளால் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இது குறித்து பா.ஜனதா மாநில துணைத்தலைவர் விஜய் பகதூர் பாதக் கூறியதாவது:- உத்தரபிரதேச சட்ட மேலவையில் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் உள்ளிட்ட 4 முஸ்லிம்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் முஸ்லிம்களின் பாதுகாவலன் எனக் கூறிக்கொள்ளும் சமாஜ், பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மேலவையில் முஸ்லிம்களுக்கு இந்த அளவு வாய்ப்பு அளிக்கவில்லை.
அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்கள் என்று பிரதமர் கூறுவதை உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. மெய்ப்பித்து வருகிறது. இவ்வாறு விஜய் பகதூர் கூறினார். கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தல்களில் கிடைத்த அதரவு, 2024 தேர்தலில் குறையும் என பா.ஜ.க. அஞ்சுகிறது. இந்த இழப்பை சமாளிக்க, முஸ்லிம்களின் ஆதரவைப் பெற பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது. இதனால் இதுபோல் முஸ்லிம்களை கவரும் நடவடிக்கைகளில் பா.ஜ.க. நேரடியாக இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.