மல்லிகார்ஜூன கார்கே அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்: ஈஸ்வரப்பா வலியுறுத்தல்!!
சிவமொக்கா தொகுதியில் தனக்கும், தனது மகனுக்கும் பா.ஜனதா டிக்கெட் கொடுக்கவில்லை என்றாலும், கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் ஈஸ்வரப்பா மாநிலம் முழுவதும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் ஹாசனில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் எங்களை குடும்ப கட்சி என்று குறை கூறுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அந்த கட்சியில் தான் தந்தை, மகன்கள், பேரன்கள் என அனைவரும் அரசியலில் உள்ளனர்.
அந்த கட்சியை நாங்கள் எப்படி கூற வேண்டும் என்று எச்.டி.குமாரசாமி சொல்ல வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க ஹாசனில் போட்டியிட பவானி ரேவண்ணா டிக்கெட் கேட்டார். அப்படி கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா?. ஜனதாதளம் (எஸ்) கட்சியில் ஒரே குடும்பத்தினர் இருப்பதால் தான், வேறு முகம் இருக்கட்டும் என சி.எம்.இப்ராகிமை கட்சி தலைவர் பொறுப்பு வழங்கி கட்சியில் வைத்து இருக்கிறார்கள். கனகதாச ஜெயந்தியை அரசு விழாவாகவும், அந்த சமுதாய மக்கள் நலன் காக்க காகினேலே நலவாரியத்தையும் எடியூரப்பா அறிவித்தார். நாங்கள் வாக்கு வங்கிக்காக இவ்வாறு அறிவிக்கவில்லை.
கனகதாசரின் சித்தாந்தம் அனைவரையும் சென்றடைய வேண்டும். அதுபோல் தான் அனைத்து சமுதாய மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை பா.ஜனதா செய்து வருகிறது. ஆனால் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் சமூகத்தில் சாதி விஷத்தை விதைத்து வருகிறார்கள். பிரதமர் மோடி பற்றி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சர்ச்சை கருத்து கூறியுள்ளார். இதுபோன்று பேசிய பிறகு மல்லிகார்ஜுன கார்கே கட்சி பொறுப்பில் இருப்பது சரியல்ல. அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.