யாழில். விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு ; வைத்தியசாலையில் அனுமதிக்க முதல் நகைகள் மாயம்!!
யாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியை தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் உரும்பிராய் வடக்கை சேர்ந்த கனகநாயகம் உமாதேவி (வயது 72) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மணி வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வெளியில் சென்று , மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை உரும்பிராய் பகுதியில் அவருக்கு பின்னால் வேகமாக வந்த கப் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து , அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்ட வேளை , விபத்தினை ஏற்படுத்திய கப் வாகனத்தில் வந்த நபர்கள் தாம் , தமது வாகனத்தில் வரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்கிறோம் என கூறி அவரை வாகனத்தில் ஏற்றி , போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
விபத்து தொடர்பில் தகவல் அறிந்து வைத்தியசாலை சென்ற பெண்மணியின் கணவர் உள்ளிட்ட உறவினர்கள் வைத்திய சாலையில் நின்ற வேளை பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வேளையே தனது மனைவி அணிந்திருந்த தங்க சங்கிலி , மோதிரம் மற்றும் காப்பு என சுமார் 06 பவுண் நகைகளை காணவில்லை என கூறியுள்ளார்.
பெண்மணியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே அவர் எவ்விதமான நகைகளும் அணிந்திருக்க வில்லை என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்க முதலே , தங்க நகைகள் அபகரிக்கப்பட்டு விட்டதாகவும் , வைத்தியசாலையில் அனுமதித்தவர்களே நகைகளை அபகரித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்து சம்பவம் மற்றும் நகைகள் அபகரிப்பு தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய கப் ரக வாகனத்தில் வந்தவர்கள் மது போதையில் இருந்ததாகவும் மிக வேகமாக வந்தே பெண்மணியை மோதி தள்ளியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வீதியில் கண்காணிப்பு கமரா மற்றும் வைத்திய சாலை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கமராக்களின் வீடியோ பதிவுகள் ஊடாக கப் வாகனத்தினை அடையாளம் கண்டு , கப் வாகனத்தில் பயணித்தவர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னடுத்துள்ளனர்.