அதானியின் மோசடிகள் குறித்து பிரதமர் மோடி பேசாமல் மவுனம் காப்பது ஏன்?: சித்தராமையா கேள்வி!!
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பிரதமர் மோடியை நோக்கி எதிா்க்கட்சி தலைவர் சித்தராமையா பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா நெருக்கடி காலத்தில் கை கழுவும் திரவம், முக கவசம், செயற்கை சுவாச கருவி உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலர் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தனர்.
அவர்களின் ஆத்மாக்கள் நியாயத்திற்காக உங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. கொரோனா நேரத்தில் தேவையான பொருட்களை அரசுக்கு ஒப்பந்ததாரர் பசவராஜ் வழங்கினர். அவருக்கு உரிய பணத்தை இந்த பா.ஜனதா அரசு பட்டுவாடா செய்யவில்லை. இதனால் அவர் கருணை கொலை செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அவருக்கு நியாயம் கொடுக்க வேண்டியவர் மோடி அல்லவா?. கல்லூரி உதவி ஆசிரியர், பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும். 40 சதவீத கமிஷன் கொடுக்காததால் ஒப்பந்ததாரர் பிரசாத் என்பவர் உயிரிழந்தார். மந்திரியாக இருந்த ஈசுவரப்பாவுக்கு 40 சதவீத கமிஷன் கொடுக்க முடியாமல் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ.80 லட்சம் லஞ்சம் கொடுத்து பணி இடமாற்றம் பெற்றார். ஆனால் மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஒரு போலீஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்பதை பிரதமர் மோடி கூற வேண்டும். இத்தகைய உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? என்பதை பிரதமர் மோடி கூற வேண்டும்.
தனது நண்பர் அதானியின் மோசடிகள் குறித்து மோடி பேசாமல் மவுனம் காப்பது ஏன்?. உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு மத்திய அரசு 31 சதவீதம் அளவுக்கு மானியத்தை குறைத்துவிட்டது. இதன் மூலம் ஏழைகளின் வயிற்றில் கல்லை போட்டது ஏன்?. சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை அதிகரித்துவிட்டனர். இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைகள் மீது மோடிக்கு இவ்வளவு கோபம் ஏன்?. இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.