எல்லை ஒப்பந்தங்களை மீறுவதால் சீனாவுடனான உறவு இயல்பாக இல்லை: ஜெய்சங்கர் பேச்சு!!
“எல்லை ஒப்பந்தங்களை மீறுவதால் சீனா உடனான நட்புறவு இயல்பு நிலையில் இல்லை,” என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 21ம் தேதி முதல், அதாவது 9 நாட்கள் அரசு முறைப் பயணமாக, பனாமா, கொலம்பியா மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் இறுதி கட்டமாக நேற்று டொமினிக்கன் குடியரசுக்கு சென்ற அவர் அங்கு கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “டொமினிக்கன் அரசுடன் பிராந்திய அளவிலான தொலைத்தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா விரும்புகிறது.
ஆனால் எல்லை தாண்டிய தீவிரவாதத்தினால் பாகிஸ்தான் உடனான இந்த உறவுகள் அதே நிலையில் நீடிக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மற்றும் ஜப்பான் உடனான நட்புறவு மேம்பட்டுள்ளது. அதே நேரம், எல்லை பராமரிப்பு ஒப்பந்தங்களை சீனா மீறி வருவதால், அதன் உடனான இந்தியாவின் தற்போதைய நட்புறவு இயல்பு நிலையில் இல்லை,” என தெரிவித்தார்.
இந்திய தூதரகம் திறப்பு: டொமினிக்கன் குடியரசில் இந்திய தூதரகத்தை திறந்து வைத்த அமைச்சர் ஜெய்சங்கர், இது குறித்து அவரது டிவிட்டரில், “இந்திய தூதரகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்நிகழ்ச்சியில் துணை அதிபர் ரக்கேல் பெனா கலந்துகொண்டிருப்பது அவர் இந்தியாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது,” என்று கூறியுள்ளார்.