60 வயசு மேயருக்கு 7ஆவது திருமணம்.. அதுவும் 16 வயது பெண்ணுடன்.. மறுநாள் மாமியாருக்கு டாப் பதவி!!
பிரேசில் நாட்டில் 65 வயதான மேயர் ஒருவர் வெறும் 16 வயதான சிறுமியை ஏழாவது முறையாகத் திருமணம் செய்து கொண்டுள்ள ஷாக் நிகழ்வு நடந்துள்ளது. காதலுக்கு பொதுவாகக் கண் இல்லை என்பார்கள். அதாவது ஒருவருக்கு எப்போது யார் மீது காதல் வரும் என்று சொல்லவே முடியாது என்பதே இதன் அர்த்தம். இது உண்மை தான் என்றாலும் உலகில் நடக்கும் சில விஷயங்கள் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.
அப்படியொரு சம்பவம் தான் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. அங்கே 65 வயதான மேயர் ஒருவர் வெறும் 16 வயதான சிறுமியைத் திருமணம் செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பிரேசில்: தெற்கு பிரேசில் நாட்டில் அராகாரியா நகரத்தின் மேயராக இருப்பவர் ஹிஸாம் ஹுசைன் டெஹைனி.. 65 வயதான ஹிஸாம் ஹுசைன், தன்னை விட 49 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் 16 வயதான மறுநாளே அந்த சிறுமியை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரேசில் நாட்டின் சட்டப்படி பெண்ணின் திருமண வயது 16ஆக உள்ளதால், இந்தத் திருமணம் சட்டப்படி சரியானதுதான். இது பிரேசில் நாட்டில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சை இத்துடன் நிற்கவில்லை.. ஏனென்றால் இந்த திருமணத்திற்கு மறுநாளே மேயர் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை செயலாளராக அந்த சிறுமியின் தாயை நியமித்துள்ளார். இது மேலும் பரபரப்பைக் கிளப்பியது.
திருமணம்: பிரேசில் சட்டத்தின்படி, 16 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு அவர்களின் பெற்றோரின் ஒப்புதலுடன் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்ய முடியும்.. சிறுமியைத் திருமணம் செய்ய ஒப்புதல் தர வேண்டும் என்பதற்காகவே மேயர் சிறுமியின் தாயை டாப் பொறுப்பிற்கு நியமித்துள்ளதாகவும் இதுவும் ஒரு வகையில் லஞ்சம் தான் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே, அவருக்கு எதிராக ஊழல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த சிறுமியின் தாயார் மரிலீன் ரோட் கல்வி அமைச்சகத்தில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியராக இருந்தார். திருமணத்திற்கு மறுநாள் மாமியாருக்கு துறையில் டாப் பொறுப்பை வாரி வழங்கியுள்ளார் இந்த நேர்மையான மேயர்.. அங்குள்ள பல்வேறு அமைப்புகளும் இவர் பதவி விலக வேண்டும் என்றும் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் சாடி வருகின்றனர்.
அடாவடி விளக்கம் : இந்தச் சூழலில் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, மேயர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் “ஒரு பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழு அதிகாரம் மேயருக்கு இருக்கிறது. எனவே, அதன் அடிப்படையிலேயே மேயர் அவரை நியமித்துள்ளார். மேலும், அவர் தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ளார். அவருக்குக் கடந்த 26 வருடப் பணி அனுபவம் இருக்கிறது” என்றார். இதில் விஷயம் என்னவென்றால் அந்த 16 வயது சிறுமி இவரது ஏழாவது மனைவியாவார். இதற்கு முன்பு அந்த மேயர் 6 முறை திருமணம் செய்து விவகாரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேயருக்கு அவரது முதல் திருமணம் 1980ஆம் ஆண்டு நடந்துள்ளது. அவருக்கு முதல் திருமணம் நடந்த போது அவரது இப்போதைய மாமியார் பிறக்கக் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜினாமா: 6 மனைவிகள் மூலம் இவருக்கு 16 குழந்தைகளும் பிறந்துள்ளது. இதில் சில குழந்தைகள் இவரது தற்போதைய மனைவியை விட வயதானவர்கள் ஆவர். இதற்கு பிரேசிலில் எதிர்ப்பு அதிகரித்த நிலையில், வெறு வழியின்றி அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும், அவர் கோடிகளில் புரளும் பெரும் பிஸ்னஸ்மேன் என்பதால் நிச்சயம் புதுமணத்தம்பதிக்கு இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.