;
Athirady Tamil News

வயலில் களையெடுக்க கலெக்டர் அலுவலக ஊழியர்களை அனுப்பி வையுங்கள்… வைரலாகும் விவசாயி கடிதம் !!

0

இன்றைய காலகட்டத்தில் வயலில் இறங்கி விவசாய வேலையை செய்வதற்கு ஆள் கிடைப்பது இல்லை. 100 நாள் வேலை திட்டம் கிராமப்புறங்களில் தீவிரமானபிறகு பெண்கள் அனைவருமே அந்த வேலைக்கு சென்று விடுகிறார்கள். இதுவே விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று தனது உள்ள குமுறலை வெளிப்படுத்தி உள்ளார் தென்காசி மாவட்ட விவசாயி ஒருவர். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா நெல்கட்டும்செவல் அருகில் உள்ளது பாறைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

எனது கிராமத்தில் நான் 4 ஏக்கர் நில பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். பிப்ரவரி முதல் ஜூன் வரையில் கோடை கால பருவத்திலும் செப்டம்பர்-ஜனவரி வரையில் மழை கால பருவத்திலும் விவசாயம் செய்து வருகிறோம். இந்த 2 பருவத்திலும் பயிரின் வயதுக்கு ஏற்ப முதல் 50 நாட்கள் வரையில் களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிக்காக அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கடைசி 30 நாட்கள் அறுவடை பணிக்கும் கூலி ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்த காலகட்டங்களில் 100 நாள் வேலைக்கு கிராம மக்கள் அனைவரும் சென்று விடுகின்றனர்.

இதனால் பயிர்களுக்கு களை எடுக்க ஆள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். அப்படியே ஆட்கள் கிடைத்தாலும் 100 நாள் வேலை காரணமாக 7 மணி நேர வேலை என்பது 4 மணி நேரமாக சுருங்கி போய்விட்டது. இதனால் பயிர் பராமரிப்பு செலவு அதிகமாகி விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறோம். தற்போது நான் 3 ஏக்கரில் பருத்தி பயிரிட்டுள்ளேன். எங்கள் பகுதியில் தற்போது 100 நாள் திட்ட பணிகள் நடைபெறுவதால் களை எடுக்க ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே கலெக்டர் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் இருந்தால் அவர்களை களை எடுக்க அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு கூலி, பஞ்சப்படி, பயணப்படி,மதிய உணவு என அனைத்தையும் கொடுக்க தயாராக உள்ளேன். இவ்வாறு விவசாயி மகேஸ்வரன் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.