;
Athirady Tamil News

கண்களுக்கு விருந்து படைக்கும் கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா!!

0

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் கைவினை, உணவு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாட்டை முக்கியமான சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தை 1971-ம் ஆண்டில் உருவாக்கி சுற்றுலா பேருந்து வசதியையும், சுற்றுலா திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு சுற்றுலாத்துறையை விளங்கச் செய்தார். கருணாநிதியால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், ‘பூம்புகார்’ என்ற வர்த்தக பெயரால் 1.8.1973 அன்று முதல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கருணாநிதி 1989-ம் ஆண்டு முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்து பெண்கள் தாங்களாகவே வங்கி நடவடிக்கைகள், சுய தொழில் செய்தல், குழுவாக செயல்படுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்தார்.

அவரது வழியில் தற்போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி, சமமான வளர்ச்சி என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடைபெற்று வருகின்றது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா பாதிப்பால் நலிவடைந்த நிலையில் இருந்த சுற்றுலாத்துறை, முதலமைச்சரின் சிறப்பான முன்னெடுப்புகளால் தற்போது விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிறு வணிகர்கள், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என லட்சக்கணக்கானோருக்கு இத்துறையின் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதும், நிரந்தர பொருளாதாரம் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டும் வருகின்றது.

தமிழ்நாட்டை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ள சென்னை விழாவில் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் 30 அரங்கங்களில் இடம் பெறுகின்றன. 20 வெளிமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணிவகைகள், பட்டு சேலைகள், கோ –ஆப் டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் 70 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியால் சென்னை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கைவினை கலைஞர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழ்நாடு கலை நயமும், பாரம்பரியமும் கொண்டதாகும். தொன்மை வாய்ந்த துறைமுக நகரங்களை கொண்ட தமிழ்நாட்டில் வெளிநாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. ஆள்பாதி, ஆடைபாதி என்பது தமிழ்நாட்டின் பழமொழிகளுள் ஒன்றாகும். இந்த பழமொழி ஆடை நெய்யும் நெசவாளர்களின் புகழை தெரிவிப்பதாக உள்ளது. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழி கைத்தொழிலின் மேன்மையை உணர்த்துவதாக உள்ளது. தற்போது நடைபெறும் திருமணங்களில் பெண்களின் ஆடைகள் கைவினைக் கலைஞர்கள் மூலம் நூல் வேலைப்பாடுகள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுவது கை வினைக் கலைஞர்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலை கள், பரமக்குடி காட்டன் சேலைகள், ராசிபுரம் தாழம்பூ பட்டு புடவைகள், ஆர்கானிக் கைத்தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பவானி ஜமுக்காளம், படுக்கை விரிப்புகள், அலங்கார கைத்தறி துணிகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், செட்டிநாடு சுங்கடி புடவைகள், ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள், துணிப் பைகள், தஞ்சா வூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

மேலும் தென்னக கலைபண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என தினந்தோறும் 5-க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன. சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சென்னை விழா-கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா மே 14-ந் தேதி வரை தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 ஆகும். கண்களுக்கு விருந்து படைக்கும் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து விட்டு, விதம் விதமாக சாப்பிட்டும் வரலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.