வடிவேலு பட பாணியில் பசுமை வீடுகளில் சோலாரை சரி செய்வதாக கூறி நகை, பணம் திருடிய வாலிபர்!!
சுந்தர் சி நடித்த நகரம் என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்திருக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதிலும் அவர் டிஸ் அன்டனாவை சரி செய்யும் நகைச்சுவை காட்சிகளுக்கு அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இந்த காட்சியை எப்போது பார்த்தாலும் சிரிப்பு வந்து கொண்டே இருக்கும். அதே பாணியில் தற்போது கோவை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் அரசினால் கட்டிகொடுக்கப்பட்ட பசுமை வீடுகளுக்கு சென்று, அங்கு சோலார் பேனலை சரி செய்து தருவதாக கூறி நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:- சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம்(61). இவர் தமிழக அரசால் வழங்கப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தன்னை சோலார் இன்ஸ்பெக்டர் எனவும், உங்கள் வீட்டில் உள்ள சோலாரை சரிபார்க்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பரமசிவமும் அதனை உண்மை என நம்பினார். பின்னர் அந்த வாலிபர் வீட்டின் மேல் ஏறி சோலாரை சரி செய்து இருக்கிறார். அப்போது கீழே நின்ற பரமசிவத்திடம் வீட்டிற்குள் மின்சாரம் சரியாக வருகிறதா என பார்க்க கூற, அவரும் அதனை பார்த்துள்ளார். பின்னர் கீழே வந்த அந்த வாலிபர், தான் வீட்டிற்குள் சென்று மின்சாரம் சரியாக வருகிறதா என பார்க்கிறேன். நீங்கள் மேலே சென்று சோலாரை பாருங்கள் என கூறியுள்ளார். பரமசிவமும் மேலே சென்றுவிட்டார். இதனை பயன்படுத்தி கொண்ட வாலிபர், வீட்டில் இருந்த 9 பவுன் நகையை திருடிவிட்டார். பின்னர் சோலார் பேனல் சரியாக இருக்கிறது. நான் வருகிறேன் என கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் சென்ற பின்பு பரமசிவம் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர் அதனை சோதனை செய்தார். அப்போது அதில் இருந்த நகை மாயமாகி இருந்தது. உடனடியாக சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாகவே சூலூர் பகுதிகளில் இதுபோன்று திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால், அதில் ஈடுபடும் நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று தென்னம்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார்(வயது34) என்பதும், சூலூரில் பசுமை வீடுகளில் சோலார் பேனலை சரி செய்வதாக கூறி தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர், விசாரணையில், முத்துக்குமார் பசுமை வீடுகள் எனப்படும் அரசால் கட்டி கொடுக்கப்பட்டுள்ள வீடுகளை நோட்டமிட்டே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வீட்டிற்கு சென்றதும் தன்னை ஒரு சோலார் இன்ஸ்பெக்டர், உங்கள் வீட்டில் சோலாரை சரி செய்ய வந்துள்ளேன் என கூறி விட்டு, அதனை சரி செய்வது போல நடித்து நகை, பணத்தை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. இவர் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இதுபோன்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.